36 தொழிலாளர்கள் கதி என்ன தேடும் பணி தீவிரம்

டேராடூன், நவ. 13- உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில், 36 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கிறார்கள்.
அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக, இடிபாடுகள் வழியாக துளை போட்டு ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் 4.5 கி.மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில்கியாராவையும் உத்தர்காசியில் உள்ள டண்டல்காவையும் இணைக்கும் விதத்தில் இந்த சுரங்க பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்க பாதை அமைக்கப்பட்டால் இரு இடங்களுக்கும் இடையிலான தூரத்தை 26 கி.மீட்டர் அளவுக்கு குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் 36 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 4 மணிக்கு சுரங்கம் இடிந்து விழுந்தது. சுமார் 150 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்த இந்த சுரங்கத்தில் 36தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர். 200 மீட்டர் நீளத்துக்கு தோண்டினால்தான் சுரங்கத்துக்குள் சென்று மீட்பு பணியை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை யாரும் காயம் அடைந்ததாகவோ அல்லது இறந்ததாகவோ தகவல் இல்லை.
இதனிடையே மாநில முதலவர் புஷ்கர் சில் டாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தான் அடிக்கடி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவ்வப்போது நிலவும் சூழ்நிலை குறித்து கேட்டு அறிந்து வருவதாக கூறினார். மாநில பேரிடர் மீட்பு படையினருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்வதாகவும், அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்தார்.சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சுரங்கப்பாதை கட்டுமானப் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணியளவில் சுரங்கப்பாதையின் 150 மீட்டர் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால், சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பிறகுதான் யாரேனும் பலியாகியுள்ளனரா என தெரியவரும்’’ என்றார். அதேநேரத்தில், உத்தரகாண்ட் எஸ்பி சம்பவம் காலை 6 மணி முதல் 7 மணிக்கு இடையே நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.