37 லட்சம் வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை

மும்பை, செப். 7- பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கும் வகையில், ஜன் தன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் மூலம் ஆதார் கார்டை வைத்து மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கி கொடுக்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட 12 சதவீத வங்கி கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என பேங்க் ஆப் மகாராஷ்டிரா பொது மேலாளர் விஜய் காம்ளே கூறியுள்ளார். அவுரங்காபாத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பாகவத் காரட் தலைமையில் நடந்த மாநில பேங்கர்ஸ் கமிட்டி கூட்டத்துக்கு பிறகு அவர் இதை கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன.
இதில் 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன. அந்த கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை. எனவே அந்த கணக்கு வைத்த நபர்களை தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கணக்கை செயல்பாட்டில் வைக்க கூற வேண்டும்.
இதேபோல 18 வயது நிறைவடைந்த இளைஞர்களை கண்டறித்து ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கை தொடங்க வைக்க வேண்டும். மகாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 10 ஆயிரத்து 938 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.