38 லட்சம் திருமணங்கள்

புதுடெல்லி,நவ.27-
இந்தியாவில் அடுத்த 3 வாரங்களில் 38 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் ரூ.4.74 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெறும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கணித்துள்ளது. மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த திருமணங்கள் என்றாலே அதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி ஆடை, அணிகலன் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள், ஆடம்பர பரிசுகள் என பல்வேறு பொருட்களின் விற்பனை களைகட்டும். இவை மட்டுமின்றி திருமண மண்டபம், கல்யாண விருந்து, இசைக் கச்சேரி போன்றவற்றிற்கும் திருமண வீட்டார் பெறும் செலவு செய்வது வழக்கம். இதனால் திருமண முகூர்த்த நாட்களில் நாடு முழுவதும் வழக்கத்தை விட வர்த்தகம் அதிகரித்தே காணப்படும். தமிழ்நாட்டில் கார்த்திகை மாதத்தில் அதிக திருமணங்கள் நடைபெறுவதை போல், வட இந்தியாவிலும் பகவான் விஷ்ணு தூக்கத்தில் இருந்து எழுந்து துளசியை திருமணம் செய்ததாக நம்பப்படும் நாளான தேவ பிறபோதனை ஏகாதசியில் தொடங்கி ஒரு மாத காலம் திருமண சீசன் என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நவம்பர் 23ம் தேதி தொடங்கும் இந்த திருமண சீசனையொட்டி முக்கிய நகரங்களில் விழாக்கள் களைக்கட்டியுள்ளன.