398 இடங்கள் வரை பிஜேபி வெல்லும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

சென்னை: மார்ச் 9: வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் பாஜக தான் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். மாறாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணி மீண்டும் தோல்வியை சந்திக்கும் என டைம்ஸ் நவ் மேற்கொண்ட சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் ‛இந்தியா’ கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை வரும் 15ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் கூட தேர்தல் தேதிக்கு முன்பே கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன.இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக உள்ளது. வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் மறுபுறம் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. பாஜக சார்பில் முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அதேபோல் நேற்று காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 39 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் களமிறங்கி உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டைம்ஸ் நவ் – இடிஜி ரீசர்ஜ் அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 357 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. இதில் 85 சதவீதம் பேரிடம் நேரிலும், 15 சதவீதம் பேரிடம் போன் மூலமாக பேசியும் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மீண்டும் மத்தியில் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி குறைந்தபட்சம் 358 தொகுதிகளிலும் அதிகபட்சம் 398 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் கூட 400க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இலக்கு மிஸ்ஸாக வாய்ப்புள்ளது என டைம்ஸ் நவ் சர்வே தெரிவித்துள்ளது. அதேபோல் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணிக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் மொத்தம் 110-130 தொகுதிகளில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டைம்ஸ் நவ் சர்வே ‛இந்தியா’ கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.