4 சதவீதம் அதிக மழை பதிவு

சென்னை: ஜனவரி . 1 – வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 4 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. அதே நேரத்தில் 20 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், இதுவரை வானிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரு பெரும் பேரிடர்களை நிகழ்த்தியுள்ளது. கடந்த டிச.3, 4 தேதிகளில் இடைவிடாது பெய்த மழையால் முறையே ஆவடியில் தலா 28 செமீ (மொத்தம் 56 செமீ), நுங்கம்பாக்கத்தில் 23, 24 செமீ (மொத்தம் 47 செமீ), மீனம்பாக்கத்தில் 25, 18 செமீ (மொத்தம் 43 செமீ), தாம்பரத்தில் 17, 23 செமீ (மொத்தம் 40 செமீ), செம்பரம்பாக்கத்தில் 16, 20 செமீ (மொத்தம் 36 செமீ) பதிவாகியுள்ளது.
4-ம் தேதி அதிகபட்சமாக பூந்தமல்லியில் 34 செமீ மழை பெய்தது.
6 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது.இது இன்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.