4 பேர் கொலையில் திடுக் தகவல்

பல்லடம், செப்டம்பர் . 4 பல்லடம் அருகே தாய்-மகன் உள்பட 4 பேர் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி வீசி விட்டு கொலை கார கும்பல் தப்பி சென்று விட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் சரக்கு வேன் ஒன்றை வைத்திருந்தார். அந்த சரக்கு வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார். அந்த டிரைவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். ஆனால் அந்த டிரைவர் வேலையை விட்டு நின்ற பிறகும் செந்தில்குமார் வீட்டிற்கு வரும் வழிப்பாதையில் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது செந்தில்குமார் அவரை எச்சரித்து வேறு பகுதிக்கு சென்று மது அருந்துமாறு பலமுறை கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த டிரைவரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் நேற்று இரவு செந்தில்குமாரின் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர். இதை பார்த்த செந்தில்குமார் அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து ேபாகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளனர். இவருடைய அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மோகன்ராஜ், மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி மற்றும் ரத்தினாம்மாள் ஆகியோரையும் கொலை செய்து விட்டு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.