4 ரவுடிகள் சுட்டுக் கொலை

புதுடெல்லி: அக். 23-
இன்று அதிகாலை டெல்லியில் நடந்த என்கவுன்டரில் பீகாரைச் சேர்ந்த நான்கு முக்கிய ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ரவுடிகள் அனைவரும் சிக்மா என்ற கேங்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இந்த என்கவுன்டரில் 4 ரவுடிகளும் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பீகாரை சேர்ந்த கொடூரமான ரவுடி கேங்களில் ஒன்று சிக்மா. இந்த கேங்கை சேர்ந்த ரவுடிகள் சிலர் டெல்லியில் உள்ள ரோஹினி என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி மற்றும் பீகார் காவல்துறையினர் இணைந்து அதிரடி ஆபரேஷனை நடத்தினர்.
அதிகாலை 2 மணியளவில் ரவுடிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த போலீசார், அவர்களைச் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது 2.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ரோஹினியில் உள்ள பகதூர் ஷா மார்க் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சௌக் முதல் பன்சாலி சௌக் வரை துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் ரவுடிகளை சுற்றிவளைத்த நிலையில், அப்போது ரவுடிகள் தப்பிக்க முயன்றுள்ளனர். குறிப்பாக போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அப்போது இந்த என்கவுன்டர் நடந்துள்ளது. போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் நான்கு ரவுடிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து காயமடைந்த ரவுடிகள் ரோஹினியில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
கொல்லப்பட்ட ரவுடிகள் ரஞ்சன் பதக் (25), பிம்லேஷ் மஹ்தோ (25), மனிஷ் பதக் (33), மற்றும் அமன் தாக்கூர் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ரஞ்சன் பதக் இக்கும்பலின் தலைவன் ஆவார். இவர்கள் 4 பேரும் பீகாரை சேர்ந்த சிக்மா கேங்கை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பீகார் முழுவதும் இந்த சிக்மா கேங் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கூலிப்படை கொலை உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்கியிருந்தது. கொல்லப்பட்ட நான்கு பேர் மீதும் கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் பீகாரில் பல குற்றச் செயல்களில் தேடப்பட்டு வந்தவர்கள் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ரஞ்சன் பதக்கை கைது செய்ய உதவுபவர்களுக்கு ₹25,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. சீதாமர்ஹி மற்றும் பீகாரின் அருகிலுள்ள மாவட்டங்களில் நடந்த ஐந்து முக்கிய கொலைகள் உட்பட எட்டு கிரிமினல் வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார்.