40 குடும்பங்கள் சிக்கி தவிப்பு

மானாமதுரை: ஜன. 11- மானாமதுரையில் குடியிருப்பை கண்மாய் நீர் சூழ்ந்ததால் 40 குடும்பங்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா நகரில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள ஆதனூர் கண்மாய் நிரம்பியது. இதையடுத்து அக்கண்மாய்க்கு செல்லும் வைகை ஆற்றுக் கால்வாயை ஷட்டர் மூலம் அடைத்து வைத்துள்ளனர். ஆனால் இரவு நேரங்களில் சிலர் ஷட்டரை திறந்து விடுகின்றனர்.இதனால் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்கு புகுந்து வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சீனியப்பா நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து சீனியப்பா நகர் மோகன்தாஸ் கூறுகையில், ஆதனூர் கண்மாய் நிரம்பிய நிலையில், கால்வாயை ஷட்டர் மூலம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அடைத்து வைத்துள்ளனர். ஆனால் இரவு நேரங்களில் திடீரென சிலர் ஷட்டரை திறந்துவிடுவதால், எங்கள் பகுதிக்குள் தண்ணீர் புகுகிறது. ஏற்கெனவே தண்ணீரை வெளியேற்ற முடியாமல் உள்ள நிலையில் தொடர்ந்து திறந்து விடுகின்றனர்.இதனால் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளோம். குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும். மேலும் ஆற்றுக் கால்வாயில் இரவு நேரங்களில் ஷட்டரை திறந்து விடுவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்.