40 சதவீத எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் – ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி, செப்.13- ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், கடைசியாக போட்டியிட்ட தேர்தலுக்காக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில், தங்கள் மீதான வழக்குகள், சொத்து மதிப்பு ஆகியவற்றை கூறியிருந்தனர். அவற்றை ஆய்வு செய்து மேற்கண்ட அமைப்புகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 776.
அவர்களில் 763 எம்.பி.க்களின் விவரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதுள்ள எம்.பி.க்களில் 40 சதவீதம் பேர் (306 எம்.பி.க்கள்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 25 சதவீதம் பேர் (194 எம்.பி.க்கள்) மீது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக, 11 எம்.பி.க்கள் கொலை வழக்கை சந்தித்து வருகிறார்கள்.
மாநில வாரியாக பார்த்தால், அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த 41 எம்.பி.க்கள் குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். சொத்து மதிப்பை எடுத்துக்கொண்டால், 763 எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.29 ஆயிரத்து 251 கோடி ஆகும். இரு அவைகளை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் 385 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7 ஆயிரத்து 51 கோடி ஆகும்.
பாரத ராஷ்டிர சமிதியின் 16 எம்.பி.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரத்து 156 கோடி ஆகும். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஒரு எம்.பி.யின் சராசரி சொத்து மதிப்பு ரூ.38 கோடியே 33 லட்சம் ஆகும்.