40 தொழிலாளர்களை காப்பாற்ற அமெரிக்க இயந்திரம் மூலம் மீட்பு பணி தீவிரம்

டேராடூன்:நவ. 17-
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்தது.
இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. மற்றொரு குழாய் வழியாக உணவு பொருட்கள், குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
முதலில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுரங்கப் பாதையில் சரிந்தமண்ணை அகற்றும் பணி நடைபெற்றது. ஆனால் மேற்புறத்தில் இருந்து தொடர்ந்து மண் சரிந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் எர்த் ஆகர் இயந்திரம் மூலம் மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை சொருக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இயந்திரத்தால் பக்கவாட்டில் நீண்டதொலைவுக்கு துளையிட முடியவில்லை.
இதைத் தொடர்ந்து அமெரிக்க தயாரிப்பு துளையிடும் இயந்திரங்கள், டெல்லியில் இருந்து விமானங்கள் மூலம் பர்கோட் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. தற்போது அமெரிக்க தயாரிப்பு துளையிடும் இயந்திரங்கள் மூலம் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை சொருக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய அமைச்சர் வி.கே. சிங் சம்பவ இடத்தை நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, “சுரங்கப் பாதையின் நடுவே தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அங்கு சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு மண் சரிவு இல்லை.
அந்த இடத்தில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அடுத்த 2 முதல் 3 நாட்களில் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள்” என்றார்.