40-யும் வெல்ல வியூகம்: சிக்கலான இடங்களில் திமுகவே களமிறங்க திட்டம்

சென்னை மார்ச் 14: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வெல்லும் வகையில் வியூகம் அமைத்துள்ள திமுக,கூட்டணி கட்சிகளால் வெல்ல முடியாத,சிக்கலானதாக கருதப்படும் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு அத்தொகுதிகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தபோதே 2019 மக்களவைத் தேர்தலில் தேனியைத் தவிர அனைத்து தொகுதிகளையும் வசமாக்கியது திமுக.இந்த முறை, எந்த ஒரு தொகுதியையும் யாரும் பிடித்து விடக்கூடாது என்பதற்காகவே, கூட்டணியில் எந்த கட்சியையும் விட்டுக் கொடுக்காமல், வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுக, விசிக கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஐஜேகே விலகியதால், பெரம்பலூர் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டது. மதிமுகவை பொறுத்தவரை கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்டது.
இந்த முறை கொங்கு மண்டலத்தை திமுக வைத்துக் கொள்ள நினைப்பதால் ஈரோட்டில் திமுக போட்டியிடுகிறது. அதற்கு பதில், காங்கிரஸ் வசம் உள்ள திருச்சி அல்லது விருதுநகரை மதிமுக கோரியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழகத்தில் போட்டியிட்ட, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், ஆரணி, சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, கரூர், திருச்சி தொகுதிகளை அப்படியே ஒதுக்கும்படி கேட்டது. ஆனால், கள நிலவரம், வேட்பாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை சுட்டிக்காடி, இந்த முறை கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர், சிவகங்கை தொகுதிகளில் சிலவற்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.