400 இடங்களில் வெற்றி- அண்ணாமலை

திருப்போரூர்: பிப்.21 மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் `என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேசுவரத்தில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அண்ணாமலை பல இடங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் செங்கல்பட்டு, தாம்பரம், நேற்று திருப்போரூர், பல்லாவரம் பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டார்.
திருப்போரூரில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை முழுவதுமாக மாற்றக்கூடிய யாத்திரையாக ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை உள்ளது. திருப்பரங்குன்றத்தில் நிலத்திலும், திருச்செந்தூரில் கடலிலும், திருப்போரூரில் ஆகாயத்திலும் என்று 3 இடங்களில் முருகப் பெருமான் அசுரர்களை அழித்தார். அதேபோல அசுரர்களை நாம் களைய வேண்டும். திருப்போரூர் கோயிலில் போதிய அடிப்படை வசதி இல்லை.திமுக ஆட்சியில் கடந்த 33 மாதங்களாக எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும், பணிகளும் நடைபெறவில்லை. தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் கனவு உலகில் வாழும் முதல்வர் 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறி வருகிறார்.
பாஜகவின் 295 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தமிழகத்தில் இருந்து நம்முடைய பங்காக 39 எம்.பி-க்களை மக்களவைக்கு அனுப்ப வேண்டும்.
ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். 2026-ம் ஆண்டு அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், 2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும். ஊழலுக்கு இலக்கணமாக, தமிழகத்தின் திராவிட கட்சிகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.