487 ரன் குவித்து ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா

பெர்த், டிச. 16- பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 84ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 346 ரன்கள் சேர்த்தது. டேவிட் வார்னர் 164 ரன்கள் விளாசினார். உஸ்மான் கவாஜா 41, மார்னஷ் லபுஷேன் 16, ஸ்டீவ் ஸ்மித் 31, டிராவிஸ் ஹெட் 40 ரன்கள் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் 15, அலெக்ஸ் கேரி 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 113.2 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அலெக்ஸ் கேரி 34, மிட்செல் ஸ்டார்க்9 ரன்களில் அமீர் ஜமால் பந்தில்வெளியேறினர். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 107 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசிய நிலையில் குர்ரம் ஷாசாத் பந்தில் போல்டானார். பாட் கம்மின்ஸ் 9, நேதன் லயன் 5 ரன்களில் நடையை கட்டினர்.
பாகிஸ்தான் அணி சார்பில் அறிமுக வீரரான அமீர் ஜமால் 20.2 ஓவர்களை வீசி 111 ரன்களை வழங்கி 6விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகடெஸ்டில் 5 விக்கெட்களுக்கு மேல்கைப்பற்றிய முதல் வீரர் என்றபெருமையை பெற்றார் அமீர் ஜமால். இந்த வகையில் கடைசியாக 1967-ம் ஆண்டு அடிலெய்டுடெஸ்டில் இந்தியாவின் அபித் அலி 55 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.பெர்த் போட்டியில் மற்றொரு அறிமுக வீரரான குர்ரம் ஷாசாத் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள்எடுத்தது.தொடக்க வீரரான அப்துல்லா ஷபீக் 42 ரன்னில் நேதன் லயன் பந்திலும், கேப்டன் ஷான் மசூத் 30 ரன்னில் மிட்செல் ஸ்டார்க்பந்திலும் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 38, குர்ரம் ஷாசாத் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க355 ரன்கள் பின்தங்கிய நிலையில்இன்று 3-வது ஆட்டத்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.