5 ஆண்டுகளில் சுத்தமான குடிநீர்

டெல்லி, ஆகஸ்ட். 24 – டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார். அங்கீகாரமற்ற காலனிகளுக்கு சாலை போடும் திட்டத்தை டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- அடுத்த வருடம் டிசம்பருக்குள் அங்கீகரிக்கப்படாத அனைத்து காலனிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும்.
ஆம் ஆத்மி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் 850 காலனிகளில் சாலை வசதி அமைத்து கொடுத்துள்ளது. டெல்லியில் கடந்த 65 ஆண்டுகளில் 1700 காலனிகளில் 250-ல் மட்டுமே சாலை வசதி இருந்த நிலையில், நாங்கள் தற்போது இந்த சாதனையை படைத்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
எனக்கு தலைமை பற்றித்தெரியாது, ஆனால் எப்படி வேலைப்பார்க்க வேண்டும் எனத் தெரியும். இலவச மின்சாரம், சுகாதாரம், தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படும் என்பதை உறுதியாக உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
எல்லா சாலைப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அதன்பின்புதான் மக்களிடம் சென்று வாக்குகள் கேட்பேன் என்றார்.

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.