5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்பு

பர்மிங்ஹாம், ஜூலை 28-இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்றது.இந்நிலையில் பர்மிங்ஹாமில் இன்று தொடங்கவுள்ள காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளில் இருந்து 5,054 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொள்ள உள்ளனர். முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. எட்கபாஸ்டனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றன காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்றது. இந்தமுறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுளளது. இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பளுதூக்கும் வீரர் பஜ்ரங் பூனியா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் ஆகியோர் தங்களது பிரிவுகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.