5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை:பிப்ரவரி. 2 – சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 – 2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் சில எம்.பி., எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தாசில்தார், விஏஓ மற்றும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு: சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பின்னி மில் இயங்கி வந்தது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த மில் மூடப்பட்டது. இதையடுத்து, இங்குள்ள இடத்தின் ஒரு பகுதியை தனியார் நிறுவனங்கள் சார்பில் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. முன்னதாக, சுமார் 14.16 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தையொட்டி குறுகலான சாலை இருந்ததால், குடியிருப்பு கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, கவுன்சிலர் முதல் எம்எல்ஏ, எம்.பி. எனபல்வேறு அரசியல் பிரமுகர்களையும் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனங்கள் உதவி கேட்டுள்ளன.
இதற்கு கைமாறாக பல்வேறு மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சமாக மொத்தம் 50 கோடியே 86,125 ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015-2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இந்த லஞ்ச பணம் கைமாறியுள்ளது. இந்நிலையில், இந்தலஞ்ச விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.