5 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் உடல் மீட்பு

பெங்களூரு, பிப். 26: பெங்களூரு கேஆர் புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிளாஸ்டிக் டிரம்மில் ஐந்து துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது.
நிசர்கா லேஅவுட்டில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஒரு சிறிய நிலத்தில் கொட்டப்பட்டிருந்த நீல நிற பிளாஸ்டிக் டிரம்மை திறந்து பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதிர்சி அடைந்தனர். உடலின் மேல் பகுதி அப்படியே இருந்த நிலையில், கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் உடல் கிடந்தது.
உயிரிழந்தவர் 65 வயதுடைய சுசீலாம்மா என போலீசார் அடையாளம் கண்டனர். மாலை 5 மணியளவில் டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உள்ளூர்வாசிகள் டிரம்மை எட்டிப்பார்த்தபோது, ​​உள்ளே ஒரு சடலம் இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலைக்கும் நள்ளிரவுக்கும் இடையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. கே.ஆர்.புரத்தில் வசித்து வந்த அவரது மகள் கடைசியாக சனிக்கிழமை காலை சுசிலம்மாவை பார்த்துள்ளார். மகளுக்கு திருமணமாகி கல்லூரி செல்லும் குழந்தை உள்ளது.சுசீலாம்மா அடிக்கடி தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் சாவகாசமாக‌ சிறிது நேரம் அல்லது சிறிது நாள் கழித்து திரும்பி வருவார் என்று காவல்துறை விசாரணைகள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமையன்று அவள் வீட்டை விட்டு வெளியேறியபோது, ​​வழக்கமாக சென்று, திரும்புவதைப்போல திரும்புவார் என்று அவளுடைய குடும்பத்தினர் நினைத்துள்ளனர். இந்த ந்லையில் ஞாயிற்றுக்கிழமை சுசீலம்மாவின் உடல் டிரம்மில் வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து வழக்கு பதிந்த கே.ஆர்.புரம் போலீசார், குடும்பத்தினர் உட்பட அனைவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.