5 மாநில தேர்தல்வெற்றிக்கு காங்கிரஸ் வியூகம்

டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளை ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இவர்கள் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தித் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் நடைபெறும் 5 மாநில தேர்தல் அதற்கான அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.
5 மாநில தேர்தல்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்து சில நாட்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தேர்தல் குறித்து ஆலோசிக்கக் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது. இதில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தல் நடக்கும் மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள், தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதற்கு மறுநாள் தான் தெலுங்கானா தேர்தலுக்காக காங்கிரஸ் 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. இப்போது 3 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.