5 மாநில தேர்தல் கூட்டணி குறித்து கார்கே பேட்டி

கலபுர்கி, அக். 26: 5 மாநில சட்டமன்ற‌ தேர்தலில் கூட்டணி குறித்து அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முடிவு செய்து கொள்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
‘கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என, சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை கூறியதற்கு பதிலளித்த கார்கே, ‘சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒரு பக்கம் கூட்டணி இருந்தால்.மறுபுறம் சமாஜ்வாதி கட்சியியுடன் இருக்கலாம். இதனால், உள்ளூரிலேயே கட்சியுடன் யார் இணக்கமாக இருக்க முடியும் என்பதை, மாநில காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்வார்கள்’ என்றார்.
கடந்த முறை அக்கட்சியினர் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றார்கள். இப்போது எவ்வளவு தொகுதிகளை கேட்கின்றார்கள் என்பதை கருத்தில் கொண்டு இறுதி முடிவை எடுப்பார்கள். 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள‌ நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தேசிய அளவில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு தேர்தலையும், தனக்கான தேர்தல் போல் நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்கள் மற்றும் முதல்வர்களின் முகத்தைப் பார்த்து வாக்களிக்கக் கூடாது என்ற பிம்பத்தை சித்தரிக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் எனக்கு வாக்களியுங்கள் என்கிறார். மோடி மாநிலத்துக்கு அமைச்சராகவா வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர் என்றார்.
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவும், வெற்றிபெறும் இடங்களில் தலைவர்களைக் குறிவைக்கவும் பிரதமர் மோடி, ஆரம்பத்திலிருந்தே வருமான வரி சோதனைகளை நடத்த அதிகாரிகளை ஏவி வருகிறார். மக்களை அச்சுறுத்துவதன் மூலம், பாஜகவினர் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ஆதரவளிப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் அறிவார்கள், வருமான வரி சோதனைக்கு அஞ்சாமல் எங்கள் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்றார்.கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது. சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டிற்கான‌ மானியம் செலவிடப்படவில்லை என்று தேர்தல் பிரசாரத்தில் பாஜக அவதூறு பரப்ப முயல்கிறது. அவர்கள் என்ன முயற்சி மேற்கொண்டாலும், அவர்களின் எண்ணம் பலிக்காது என்றார்.