5 ராணுவத்தினர் பலிக்கு பழி தீர்க்கணும்: சிவசேனா வலியுறுத்தல்

மும்பை, அக். 13- ‘ஜம்மு – காஷ்மீரில் ராணுவத்தினர் ஐந்து பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை பழி வாங்க வேண்டும்’ என, சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டம் நீக்கப்பட்ட பின், பாக்., ஆதரவாளர்கள் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.பல மதங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீருக்குள் நுழைய அஞ்சும் சூழலை பயங்கரவாதிகள் உருவாக்க முயற்சிக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பள்ளி ஆசிரியர், காஷ்மீர் பண்டிட் உள்ளிட்ட பலர் இறந்துள்ளனர். இது, 1990ல் ஆயிரக்கணக்கான பண்டிட்டுகளை வலுக்கட்டாயமாக காஷ்மீரில் இருந்து வெளியேற்றிய சூழலை நினைவூட்டுகிறது.சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் ஐந்து பேர் இறந்துள்ளனர்.
ராணுவத்தினர் சிந்திய ரத்தம் காய்வதற்குள், ஐந்துக்கு, ஐந்து மடங்கு பயங்கரவாதிகளை பழி தீர்க்க வேண்டும். அப்போது தான் இந்தியர்களின் மனம் அமைதி அடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் ராணுவத்தினர் பலியானதை கண்டித்து காஷ்மீரில், சிவசேனா மற்றும் டோக்ரா முன்னணியினர், பாக்., பிரதமர் இம்ரான் கான் உருவப்பொம்மையை எரித்தனர்.