5,000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

ராமநாதபுரம்: ஜன. 11- முதுகுளத்தூர் தாலுகாவில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதிகளில் 5 செ.மீ.க்கு மேல் மழை பதிவானது. கடலாடியில் 41 மி.மீ., கமுதியில் 35 மி.மீ., முதுகுளத்தூரில் 25.1 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 611 மி.மீ. மழை பதிவானது. அதனால் பெரும்பாலான கிராமங்களில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியது.
சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக முது குளத்தூர் வட்டத்துக்குட்பட்ட பிரபக்களூர் வருவாய் கிராமத்தில் உள்ள பிரபக்களூர், மீசல், கிழவனேரி, முத்து விஜயபுரம் மற்றும் இலங்காக்கூர், பொசுக்குடி, வெங்கலக்குறிச்சி, விளங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது.
இது குறித்து மீசலைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி கூறியதாவது: இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்ததால் நெற்பயிர் நன்கு வளர்ந்து பொங்கலுக்கு பின்பு அறுவடை செய்ய தயாராக இருந்தோம். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி விட்டது. மூழ்கிய பயிரில் உள்ள நெல் மணிகள் இன்னும் சில நாட்களில் முளைத்து வீணாகி விடும். எனவே, அரசு எங்களுக்கு வெள்ள நிவாரணமும், பயிர் காப்பீட்டு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.