51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

புதுடெல்லி: ஆக.28- மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ரெயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் முகாம்கள் (ரோஜ்கர் மேளா) பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று (திங்கட்கிழமை) காலை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கினார். மேலும் புதிதாக நியமன ஆணை பெற்றவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
பாஜக மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இத்தனை ஆண்டுகளில் ஏராளமான விமர்சனங்களை மத்திய அரசு எதிர்க்கொண்டு வந்திருந்தாலும், வேலை வாய்ப்பின்மை பிரச்னை மிகவும் கூர்மையான குற்றச்சாட்டாக நீடித்து வருகிறது. பொதுத்துறைகளில் தனியார் மயத்தை அனுமதித்ததால் நிரந்தர அரசு வேலைகள் கான்ட்ராக்ட் வேலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்படி இருக்கையில் எதிர்வரும் 2024ம் ஆண்டு தேர்தலுக்குள் இந்த பிரச்னைகளை சரி செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது.
இதற்காக பிரதமர் மோடி அறிவித்த திட்டம்தான் ‘ரோஜ்கர் மேளா’. இந்த திட்டத்தின் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அவ்வப்போது ‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு விழா நடத்தப்பட்டு ரயில்வே, போலீஸ், தபால் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, குடிமையியல் துறை போன்ற துறைகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.
கடைசியாக கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் 44 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு விழாக்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் 70,000க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தற்போது இதனைத் தொடர்ந்து, இன்று 51,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த முறை உள்துறை அமைச்சகம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ( எல்லைப் பாதுகாப்புப் படை , சாஷ்த்ர சீமா பால் (மத்திய ஆயுதப் போலீஸ் அசாம் ரைபிள்ஸ், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை ( போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் டெல்லி காவல்துறை என மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் துறைகளில் கான்ஸ்டபிள் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன
பிரதமர் மோடி வீடியா கான்பிரன்சிங் மூலம் காலை 10.30 மணிக்கு இந்த பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதேபோல மத்திய ஆயுதப் போலீஸ் படை மற்றும் டெல்லி காவல்துறையை வலுப்படுத்துவதன் மூலம் உள் நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சியை எதிர்த்துப் போராடுவது, இடதுசாரி அதீதீவிரவாதத்தை முறியடிக்க முடியும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.