6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: இந்திய கனவு தகர்ந்தது

அகமதாபாத்,நவ.19-
நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இது ஆஸ்திரேலியா வெல்லும் ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பை பட்டம் ஆகும். டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் என இருவரும் அபார கூட்டணி அமைத்து ஆஸி.க்கு வெற்றி தேடி தந்தனர். இதன் மூலம் இந்திய அணியின் கோப்பை கனவை கலைத்தனர். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. டேவிட் வார்னர் மற்றும் ஹெட் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் ஓவரில் 15 ரன்கள் எடுத்தது ஆஸி. இருந்தும் ஷமி வீசிய அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து பும்ரா வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆட்டமிழந்தனர்.

47 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. அந்த இக்கட்டான சூழலில் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஹெட் மற்றும் லபுஷேன். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுபக்கம் லபுஷேன் அரை சதம் கடந்தார். 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் என்ற இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிய உறுதி செய்தது. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. மேக்ஸ்வெல் வெற்றிக்கான அந்த 2 ரன்களை ஸ்கோர் செய்தார்.


இந்தியா இன்னிங்ஸ்: கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். கில், 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார் ரோகித் சர்மா. 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஹெட் அபார கேட்ச் பிடித்து ரோகித்தை வெளியேற்றினார். ஸ்ரேயஸ் ஐயர், 4 ரன்களில் அவுட் ஆனார்.
3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 109 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தனர். கோலி, 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் விக்கெட்டை இழந்த விதம் துரதிருஷ்டவசமானது. பின்னர் வந்த ஜடேஜா, 14 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த கே.எல்.ராகுல், ஸ்டார்க் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அவர் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து ஷமி மற்றும் பும்ரா ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது. எப்படியும் சுமார் 20 ரன்களை அவர்கள் தடுத்திருப்பார்கள்.
சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருக்கு பந்தை மிகவும் நிதானமாக வீசி இருந்தனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்திய அணி. முதல் முறையாக இந்த தொடரில் ஆல் அவுட் ஆகியுள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் எடுக்க வேண்டும். ஸ்டாரக் 3 விக்கெட்கள், கம்மின்ஸ் மற்றும் ஹேஸசில்வுட் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். மேக்ஸ்வெல் மற்றும் ஸாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். முடிவில் இந்தியா நிர்ணயித்த இலக்கை எட்டி ஆஸ்திரேலியா வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது