6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி

துபாய்,அக்.7-
ஐ.பி.எல். கிரிகெட்டின் 53-வது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதியது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி, 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருந்தது.
அதே சமயம் பிளே-ஆப் சுற்றை அடைந்துவிட்ட சென்னை அணிக்கு (9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளி) இதுவே கடைசி லீக் போட்டியாகும். புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை அணி களமிறங்கியது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளிசிஸ் களமிறங்கினர். இதில் ருதுராஜ்(12 ரன்கள்) 4-வது ஒவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டுபிளிசிஸ் நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். ஆனால் மறுமுனையில் அவருக்கு சரியான பார்னர்ஷிப் அமையவில்லை. மொயீன் அலி(0), ராபின் உத்தப்பா(2), அம்பத்தி ராயுடு(4) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் அணியின் ரன்வேகம் கணிசமாக குறைந்தது.
கேப்டன் தோனி 12 ரன்களில் பவுல்ட் ஆகி விக்கெட்டை இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டுபிளிசிஸ் 46 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். ஷமி வீசிய 20-வது ஓவரில் டுபிளிசிஸ்( 76 ரன்கள், 8 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா(15) மற்றும் பிராவோ(4) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் ரவி பிஷ்னொய் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கே.எல்.ராகுல். ஒருபுறம் மயங்க் அகர்வால்(12), சர்பராஸ் கான்(0), ஷாருக்கான்(8), மார்க்ரம்(13) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் கே.எல்.ராகுல் தனி ஆளாக அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களை விளாசிய கே.எல்.ராகுல் 98 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்திருந்த பஞ்சாப் அணிக்கு, இன்றைய வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.