Home Front Page News 6 தேஜஸ் போர் விமானங்கள்

6 தேஜஸ் போர் விமானங்கள்

பெங்களூர்: ஜூன் 25-
‘‘இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்களை விநியோகம் செய்வோம்’’ என எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் -1 ஏ போர் விமானங்களை ரூ.48,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021-ல் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்திட்டத்தில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து எச்ஏஎல் நிறுவனத்தின் தலைவர் டி.கே.சுனில் அளித்த பேட்டியில் கூறியதாவது: தேஜஸ் போர் விமானம் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதற்கு அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் சரியான நேரத்தில் எப்404 ரக இன்ஜின்களை விநியோகிக்காததுதான் காரணம். 2023-ம் ஆண்டிலேயே அவர்கள் இன்ஜினை விநியோகித்திருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை ஒரே ஒரு இன்ஜினை மட்டுமே வழங்கியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக விமான இன்ஜின் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் ஜிஇ நிறுவனம் 12 இன்ஜின்களை விநியோகம் செய்யும். எங்களிடம் 6 தேஜஸ் விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. அதனால் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் இந்திய விமானப் படைக்கு 6 தேஜஸ் விமானங்களை வழங்கிவிடுவோம்.
ஜிஇ நிறுவனத்தின் இன்ஜின் விநியோகம் சீரடைந்ததும், வரும் ஆண்டில் 16 விமானங்களை தயாரிக்க எச்ஏஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தேஜஸ் -1ஏ போர் விமானம் உலகத்தரத்திலானது. இதில் நவீன ரேடார், எலக்ட்ரானிக் கருவிகள் உள்ளன. பல வகை ஏவுகணைகளை இதில் பயன்படுத்த முடியும். இது நமது விமானப்படைக்கு மிக சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version