60 பயணிகளிடம் தங்கம் பறிமுதல்

சென்னை, செப். 15: ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் தங்கம், ஐபோன்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் 40 பேரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 186 பயணிகள் வந்து இருந்தனர். அந்த விமானத்தில் சுமார் 100 பேருக்கு மேல் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியில் செல்ல விடாமல் விமான நிலைய சுங்க இலாகா அலுவலகத்துக்குள் வைத்து ஒவ்வொருவராக தனி அறைக்கு அழைத்துச்சென்று ஆடைகளை களைந்தும், உடைமைகளையும் முழுமையாக சோதனை செய்தனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 4 மணி வரை நீடித்தது. சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து வைத்திருக்கும் 100-க்கும் மேற்பட்டவர்களில் 60-க்கும் மேற்பட்ட தங்கம் கடத்தும் ‘குருவி’கள் இருப்பதும், மீதம் உள்ளவர்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி பயணிகள் எனவும் தெரியவந்தது.
சோதனை முடிந்ததும் அனைவருக்கும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. இவர்களிடம் மஸ்கட்டில் இருந்து விமானத்தில் ஏறும் போது குருவிகள் அன்பளிப்பாக செண்ட், சாக்லெட்டுகள் கொடுத்து அவற்றுடன் தங்கம், ஐபோன்களையும் கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. தங்கம் பறிமுதல் இதையடுத்து 40-க்கும் மேற்பட்டவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பினர். 60-க்கும் மேற்பட்ட வர்களிடம் இருந்து தங்கம், ஐபோன்கள் உள்பட மின்சாதன பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இவற்றுக்கு அபராதம் விதித்து இருப்பதாகவும், அபராத தொகை செலுத்தி விட்டு செல்லவும், மீண்டும் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே விமானத்தில் வந்த 60-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து தங்கம், ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விமானத்தில் வந்த சக பயணிகளிடம் தாங்கள் கொண்டு வந்த கடத்தல் பொருட்களை கொடுத்து கடத்தி வந்ததும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.