7 குழந்தைகள் பலியானதற்கு சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம்

டெல்லி மே 28 மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியானதற்கு சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் (25.05.2024) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்த 12 குழந்தைகள் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் மற்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 7 குழந்தைகள் பலியானதற்கு சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் 27 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு, அங்கு ஆக்சிஜன் நிரப்பும் பணி நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும் முறையை செய்வது சட்டவிரோதமாகும் என்று விசாரணை குழு தெரிவித்துள்ளது. 5 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 27 சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தீயை அணைக்கும் கருவிகள் இல்லாததும், அவசரகால வெளியேற்றங்கள் இல்லாததையும் விசாரணை குழு கண்டறிந்தது.