75 ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதிக்குஅரசு அனுமதி

புதுடெல்லி, செப். 27 ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 75 ஆயிரம் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கபட்டிருப்பதாக மத்திய அரசின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக இந்தியாவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜுலை மாதம் தடைவிதித்தது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டது. மேலும், பாஸ்மதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே, உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகள் அனுமதி கோரும் பட்சத்தில், அந்நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பூடானுக்கு 79 ஆயிரம் டன், சிங்கப்பூருக்கு 50 ஆயிரம் டன், மொரீஷியஸ் நாட்டுக்கு 14 ஆயிரம் டன் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 75 ஆயிரம் டன் பாஸ்மதி அல்லாத அரசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலிருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்ததால் சர்வதேச சந்தையில் அரிசி விலை அதிகரித்தது.
இந்தியா நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் 2.2 பில்லியன் டன் பாஸ்மதி இல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. கென்யா, மடகாஸ்கர், பெனின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகி உள்ளது.