77 வயது முதியவர் அடித்துக் கொலை

பெங்களூரு, நவ. 22: பெங்களூரு: அரண்மனை மைதானம் அருகே அஜாக்கிரதையாக சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டியை கண்டித்ததற்காக 77 வயது முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு குட்டஹள்ளி பகுதியில் முதியவர், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை வாங்குவதற்காக மருத்துவக் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டார்.
பெங்களூரில் வாகன ஓட்டிகளிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. உயிரிழந்தவர் முனேஸ்வரா பிளாக்கில் வசிக்கும் கிருஷ்ணப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நவம்பர் 16 ஆம் தேதி, போலீசார் இதனை சாலை விபத்து என வழக்கை பதிவு செய்தனர். 15 ஆம் தேதி இரவு மருத்துவ கடைக்கு செல்லும் வழியில் முதியவர் தனது ஸ்கூட்டரில் இருந்து விழுந்துவிட்டார் என்று அனுமானித்தனர். ஆனால், கிருஷ்ணப்பாவின் மகன் சதீஷ்குமார், இதனை சந்தேகித்து, அவரது தந்தை விழுந்த இடம் அருகிலேயே இருந்த‌ சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உண்மை தெரியவந்தது. அதில், ஒரு நபர் தனது தந்தையுடன் தகராறு செய்து அவரைத் தாக்குவதைக் கண்டார். இந்த காட்சிகளின் அடிப்படையில் வயாலிகாவல் போலீசார் நவம்பர் 17ம் தேதி கொலை வழக்கு பதிவு செய்தனர்.
அந்த பகுதியில் இருந்து சிசிடிவி பதிவுகளை கைப்பற்றப்பட்டதை போலீசார் ஆராய்ந்தப்போது, குற்றம் சாட்டப்பட்டவர் 35 வயதான சர்பராஸ் கான், வெல்டர் மற்றும் மெக்கானிக் மற்றும் அப்பகுதியில் முன்பு வசித்தவ‌ர் என்று அடையாளம் கண்டனர். தற்போது சர்பராஸ் கான் ஆர்டி நகர் பகுதிக்கு மாறிவிட்டதாகவும், தனது நண்பர்களுடன் பழகுவதற்கும், அவர்களுக்கு விருந்து வைப்பதற்கும் அடிக்கடி அரண்மனை குட்டஹள்ளிக்கு செல்வார் என்று போலீசார் தெரிவித்தனர்.
நவம்பர் 15-ம் தேதி இரவு, சர்பராஸ் கான் குட்டஹள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கிருஷ்ணப்பா தனது ஸ்கூட்டரில் இரவு 8.30 மணியளவில் மருந்து வாங்கச் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சத்தம் எழுப்பியதற்காக, சர்பராஸ் கானை, கிருஷ்ணப்பா கண்டித்துள்ளார். இதனை அடுத்து அவரை, கான் அடித்தும், உதைத்தும் தாக்கி உள்ளார். இதனை கானின் நண்பர் ரத்தன் தடுக்க முயன்றுள்ளார்.
அதனை பொருட்படுத்தாமல் கான், கிருஷ்ணப்பாவை தொடர்ந்து தாக்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணப்பா சாலையில் சரிந்த நிலையில், இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் வழிப்போக்கர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கிருஷ்ணப்பாவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக மகாவீர் ஜெயின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துள்ளார்.
முதலில், இது ஒரு ‘சுய விபத்து’ என்றும், மூத்த குடிமகன் ஹெல்மெட் அணியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். சதீஷ் குமார் சிசிடிவி கிராப்களை கிராஸ் செக் செய்யவில்லை என்றால், கான் தண்டனையிலிருந்து தப்பியிருக்கலாம். ஒரு மூத்த அதிகாரி, கான் மீது விரைவில் ரவுடி ஷீட் வழக்கை பதிவு செய்வோம் என்றார்.