8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

புதுடெல்லி, செப். 20-8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்தியகல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர், ஐஐடி பிலாய் இயக்குநர் ரஜத் மூனா, ஐஐடி காந்திநகர் இயக்குநராகவும், ஐஐடி தார்வாட் இயக்குநர் பசுமார்த்தி சேசு ஐஐடி கோவாவின் இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது முறையாக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஐஐடி இயக்குநர்கள் – கேஎன் சத்தியநாராயணா (ஐஐடி திருப்பதி) மற்றும் மனோஜ் சிங் கவுர் (ஐஐடி ஜம்மு). ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களான சேஷாத்ரி சேகர் மற்றும் ஸ்ரீபாத் கர்மல்கர் ஆகியோர் முறையே ஐஐடி பாலக்காடு மற்றும் ஐஐடி புவனேஷ்வரின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஐடி காரக்பூரின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வெங்கயப்பய ஆர் தேசாய் ஐஐடி தார்த்வாட்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஐடி பிஹெச்யுவின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியைச் சேர்ந்த ராஜீவ் பிரகாஷ் ஐஐடி பிலாய் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.