80 தொகுதியிலும் வெல்ல என்டிஏ திட்டம்

புதுடெல்லி: பிப். 13: இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி.யில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி (என்டிஏ) 64 தொகுதிகளில் வென்றது. சமாஜ்வாதி 5, பகுஜன் சமாஜ் 10, காங்கிரஸ் 1 என பிற கட்சிகள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் வரும் தேர்தலில்‘மிஷன் 80’ எனும் பெயரில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற என்டிஏ திட்டமிட்டுள்ளது. இதற்காக பாஜக தனது எம்.பி.க்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கைஅறிய ரகசிய கணக்கெடுப்பு நடத்தியது. இதில் பல எம்.பி.க்களுக்குமறுவாய்ப்பு அளித்தால் தோல்வியே எனத் தெரியவந்துள்ளது.
மேலும், மதுராவில் நடிகை ஹேமமாலினி, பரேலியில் சந்தோஷ் கங்குவார், காஜியாபாத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், பிலிபித்தில் மேனகா காந்தி ஆகியோருக்கு மூத்த வயதின் காரணமாக பாஜக மறுவாய்ப்பு அளிக்காது எனத் தெரிகிறது. மேனகா காந்தியின் மகனும் சுல்தான்பூர் எம்.பி.யுமான வருண் காந்தி, கட்சியை விமர்சிப்பதால் அவரும் போட்டியிடுவது கடினம். இந்த வகையில் மொத்தம் 40 சதவீத எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிகிறது.
அதேசமயம், வாக்காளர்களின் செல்வாக்கு பெற்ற 74 பேர் பாஜகவின் பரிசீலனையில் உள்ளனர். உ.பி.யில் என்டிஏவில் இடம்பெற்றுள்ள சுஹல்தேவ் சமாஜ்,மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் தலைமையிலான அப்னாதளம், நிஷாத் ஆகிய கட்சிகளில் சில வேட்பாளர்களை பாஜக சின்னத்தில் போட்டியிட வைக்கவும் திட்டமிடப்படுகிறது.