820 டீசல் பஸ்களை வாங்குவதற்கு டெண்டர்

பெங்களூரு, பிப். 12: பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் (பிஎம்டிசி) 820 டீசல் பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர்களை அழைத்துள்ளது. இதன் மூலம், தனது சேவையை விரிவுபடுத்தவும், செயல்பாடுகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.பிப்ரவரி 9 ஆம் தேதி பிஎம்டிசி 820 முழுமையாக கட்டப்பட்ட பாரத் ஸ்டேஜ் 6 டீசல் பேருந்துகளை வாங்க டெண்டர்களை அழைத்தது. ஏலம் சமர்ப்பிக்க பிப்ரவரி 17 ஆம் தேதி கடைசி நாளாகும்.
820 டீசல் பேருந்துகள் மாநில அரசின் நிதியில் வாங்கப்படும். சோதனை அடிப்படையில் 20 பேருந்துகள் மட்டுமே டாடா மோட்டார்ஸிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன என்று பிஎம்டிசியின் தலைமைப் போக்குவரத்து மேலாளர் (செயல்பாடுகள்) பிரபாகர் ரெட்டி தெரிவித்தார். மாநகர போக்குவரத்துக் கழகம் குறுகிய காலத்தில் திட்டமிட்டுள்ள பேருந்து கொள்முதல் தொடரில் இதுவே முதன்முறையாகும். நகரப் பேருந்துகளின் எண்ணிக்கையில் பெங்களூரு மீண்டும் முதலிடத்தைப் பெற இந்த கொள்முதல் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் 7,135 நகரப் பேருந்துகள் உள்ளன. இந்தியாவின் வேறு எந்த நகரத்திலும் இத்தனை மாநகர பேருந்துகள் இல்லை.
அக்டோபர் 2022 இல், பிஎம்டிசி 840 டீசல் பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் எடுத்தது, ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் காரணமாக அந்தச் செயல்முறையை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று.
1,000 மிமீ தரை உயரம் கொண்ட பேருந்துகளை பிஎம்டிசி வாங்குவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு நட்பாக மாற்றுவதாகவும் மனுவில் வாதிடப்பட்டது. மார்ச் 2023 இல், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு வாகனங்கள் முழு அணுகலை வழங்குகின்றன என்று போக்குவரத்து கழகம் கூறியதை அடுத்து, பிஎம்டிசி பேருந்துகளை வாங்குவதைத் தொடர நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால், சட்டசபை தேர்தலையொட்டி தாமதம் ஆனது.
பிஎம்டிசி பின்னர் புதிய டெண்டர்களை நடத்த முடிவு செய்தது. மற்றொரு பிஎம்டிசி அதிகாரி, இரண்டு மாதங்களில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, இந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்குள் பேருந்துகள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிஎம்டிசி ஒரு டீசல் பேருந்திற்கு 1 கிமீ ரூ. 78 செலவழிக்கிறது. ஆனால் ரூ.66 மட்டுமே வருவாய் கிடைக்கிறது. வால்வோ பேருந்துகள் 1 கிமீ ரூ.105 செலவழிக்கிறது. ஆனால் ரூ. 70 மட்டுமே வருவாய்க் கிடைக்கிறது.2023 மார்ச் 31 ஆம் தேதி வரை 6,688 பேருந்துகளைக் கொண்டிருந்த பிஎம்டிசி, 2,211 வாகனங்களை வாங்க அல்லது குத்தகைக்கு எடுக்கும் திட்டத்தை வகுத்துள்ளது. பேருந்துகள் மற்றும் 10 டபுள் டெக்கர் பேருந்துகளை குத்தகைக்கு எடுக்க டெண்டர் கோரியுள்ளது. அதிகாரியின் கூற்றுப்படி, இவற்றில் பல பேருந்துகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.