86 வயதில் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த முதியவர்

பெங்களூரு, ஏப். 26: 2024 பொது மக்களவைத் தேர்தல்களை அடுத்து, 25-பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி 161- சிவி ராமன் நகர் சட்டமன்றத் தொகுதி கேந்திரிய வித்யாலயா டிஆர்டிஓ, சி.வி.ராமன் நகர், பெங்களூரு-93 மொத்தம் 15 சாவடி மையங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒரு பிங்க் பூத் மையம் நிறுவப்பட்டுள்ளது. சி.வி.ராமன் நகரில் வசிக்கும் சிவராமகிருஷ்ண சாஸ்திரி தனது 86வது வயதில் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து 20வது முறையாக வாக்களித்தார். வீட்டில் இருந்தபடியே மூத்த குடிமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிவராமகிருஷ்ண சாஸ்திரி வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்க முடிவு செய்திருந்தார். இதனால் அவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் டிஆர்டிஓ மத்திய வித்யாலயா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். போலீசார் அவரை சக்கர நாற்காலியில் ஏற்றி வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வசதி செய்தனர். ‘வாக்களிப்பது நமது உரிமை. வீட்டில் இருந்தப்படி வாக்களித்தால் அதன் முக்கியத்துவம் தெரியாது. மக்களை சந்திக்க முடிவதில்லை. அதற்காகவே வாக்குச்சாவடிக்கு வந்துள்ளேன். இங்கே எல்லோரையும் சந்திக்க முடிகிறது. வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் சிவராமகிருஷ்ண சாஸ்திரி. நிஷாவும் நிதினும் மக்களவைத் தொகுதியின் முதல் தேர்தலில் வந்து வாக்களித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஸ்ரீனிவாஸ் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.