9,81,781 கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒப்பந்தம் : அமைச்சர் நிராணி

பெங்களூர் : நவம்பர் . 5 – உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 9,81,781 கோடிகள் முதலீட்டிற்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக உயர் மற்றும் மத்திய தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி தெரிவித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களின் இது குறித்த தகவல்களை தெரிவித்த அமைச்சர் கூறுகையில் 90க்கும் அதிகமான தொழில் திட்டங்கள் பெங்களூரில் நடைமுறைக்கு வர உள்ளன. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 9,81,781 கோடிகள் அளவில் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவற்றில் ஒரு லட்ச கோடி மதிப்புள்ள 68 திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 5,41,369 கோடிகள் மதிப்புள்ள 57 திட்டங்களுக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தவிர 1.57 கோடிகள் மதிப்பிலான இரண்டு திட்டங்கள் மாநாட்டில் பொதுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் நடைமுறை படுத்த நோடல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இந்த மூன்று நாள் மாநாட்டில் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களில் 70 சதவிகித திட்டங்கள் முழு அளவில் நடைமுறையாகும் நம்பிக்கை தனக்குள்ளதாகவும் அமைச்சர் முருகேஷ் நிராணி தெரிவித்தார்.