தர்மேந்திரா நலமாகஇருக்கிறார் மரண செய்தியை மறுத்த மனைவி

மும்பை: நவம்பர் 11-
மும்பை: 89 வயது நிரம்பிய பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலமானதாக தகவல்கள் பரவியது. இதனை பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான அவரது மனைவி ஹேமமாலினி முற்றிலுமாக மறுத்துள்ளார். தர்மேந்திரா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
முதுபெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா. இவரது வயது 89. இவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் கடந்த ஒருவாரமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தர்மேந்திரா, மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. தர்மேந்திராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் நேற்றைய தினம் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டவர்கள் மருத்துவமனை சென்றனர். இதனால் அவரது உடல்நலம் மிகவும் மோசமானதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் குடும்பத்தினர் மறுத்தனர். இந்நிலையில் தான் தர்மேந்திரா இன்று காலையில் மரணடைந்ததாக தகவல்கள் வெளியாகின. மூச்சுத்திணறலுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பலனளிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அதனை மனைவி ஹேமமாலினி முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில், நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாததாக இருக்கிறது. சிகிச்சையின் குணமடைந்து வரும் ஒருவரை பற்றி சேனல்கள் எப்படி தவறான செய்தியை பரப்ப முடியும்? இது மிகவும் பொறுப்பற்ற செயல். அவமரியாதைக்கானது. தயவு செய்து குடும்பத்திற்கும், அவர்களின் பர்ஷனல் விஷயத்துக்கும் மரியாதை கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதேபோல் மகள் ஈஷா தியோல், மீடியா தவறான செய்திகளை பரப்புகிறது. எனது தந்தை நலமாக இருக்கிறார். அவர் மீண்டும் வருகிறது. எங்கள் குடும்பத்திற்கு பிரைவேசியை தரும்படி கேட்டு கொள்கிறோம். என்தந்தை குணமாக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். தர்மேந்திரா கடந்த 1935ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். இவர் 1960ம் ஆண்டில் திரையுலகில் கால்பதித்தார். அமிதாப் பச்சனும், இவரும் சேர்ந்து நடித்த ஷோலே’ திரைப்படத்தின் மூமலாக புகழின் உச்சத்துடன் சென்றார். பாலிவுட்டில் ‛He Man’ என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார்.
தர்மேந்திரா சுமார் 60 வருடங்களாக பாலிவுட் திரையுலகில் வலம் வந்தவர். 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு 2012ம் ஆண்டுபத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் கால்பதித்தார். பாஜகவில் இணைந்து எம்பியானார். இவரது முதல் மனைவி பெயர் பிரகாஷ் கவுர். இந்த தம்பதிக்கு சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அதேபோல் விஜிதா மற்றும் அஜிதா என்ற மகள்கள் உள்ளனர். அதன்பிறகு தர்மேந்திரா நடிகை ஹேமமாலினியை 2வது திருமணம் செய்தார். முதல் மனைவி இருக்கும்போதே அவர் ஹேமமாலினியை கரம்பிடித்தால் சர்ச்சை எழுந்தது. ஹேமமாலினி தற்போது பாஜக எம்பியாக உள்ளார். இந்த தம்பதிக்கு ஈஷா தியோல் மற்றும் அகானா தியோல் என்ற 2 மகள்கள் உள்ளன. இதில் ஈஷா தியோல் நடிகையாகவும், அகனா தியோல் இயக்குநராகவும் உள்ளார். முன்னதாக தர்மேந்திரா விரைவில் பூரண குணமடைவார் என்று நேற்று இரவு மனைவி ஹேமமாலினி நம்பிக்கை தெரிவித்தார். தர்மேந்திராவின் மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் அவர் பூர்ணண குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.