குவைத் சிட்டி: மே 26 –
மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளில் ஒன்றான குவைத்தில் இப்போது திடீரென பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஓவர்நைட்டில் இதுபோல பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டது ஏன்.. இதன் பின்னணி என்ன.. இதில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் உள்ள ஒரு குட்டி நாடு தான் குவைத். இது ஈராக்கிற்கும் சவுதிக்கும் இடையே நடுவில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 50 லட்சத்திற்குக் கீழ் தான் இருக்கும். அதிலும் கூட பெரும்பாலானோர் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது மற்ற மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே இங்கும் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் மக்கள் வேலைக்காக வருவார்கள். அதுபோல பல லட்சம் பேர் குவைத்தில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே குவைத்தில் திடீரென இப்போது சுமார் 37 ஆயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஓவர் நைட்டில் இத்தனை பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் எனக் கூறப்படுகிறது. அப்படி திடீரென தனது குடியுரிமையை இழந்த பெண் தான் லாமா. முந்தைய நாள் வரை குவைத் குடிமகளா இருந்த லாமா, இப்போது நாடற்ற நபராக இருக்கிறார். குடியுரிமை ரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக முதலில் எந்தவொரு கம்யூனிகேஷனும் வரவில்லையாம். வெளியே சென்றிருந்த லாமா, தனது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முயன்றுள்ளார். இருப்பினும், அது ஏற்கவில்லை. விசாரித்ததில் திருமணத்தின் மூலம் பெறப்பட்ட அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டதால் அவரது வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது அதன் பின்னரே தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “அது எனக்குப் பேரதிர்ச்சியாகவே இருந்தது. நான் கடந்த 20 ஆண்டுகளாக குவைத்தில் தான் வசித்து வருகிறேன். எல்லா விதிகளையும் பின்பற்றி சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருந்து வந்துள்ளேன். அப்படி இருக்கும்போது திடீரென ஒரு நாள் நீங்கள் குவைத் குடிமகன் இல்லை என சொல்வது சரியான போக்கு இல்லை” என்றார். குவைத் அமீர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-சபா கடந்த 2023 டிசம்பரில் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே குவைத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். சில நாதங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அவர், அரசியலமைப்பின் சில பகுதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார். மேலும், குவைத்தை அதன் உண்மையான மக்களுக்குச் சுத்தமாகவும், அசுத்தங்களிலிருந்து விடுவிப்பதாகவும் அமீர் உறுதியளித்தார். என்ன காரணம் அதன் பிறகே அவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். குவைத் குடிமக்களுடன் ரத்த உறவுகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே குவைத் சொந்தம் என்பதே அவரது நிலைப்பாடு. இதன் காரணமாகவே திருமணம் உள்ளிட்ட மற்ற வழிகளில் பெற்ற குடியுரிமையை அவர் ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார். இது குவைத் அடையாளத்தை மறுவடிவமைக்கவும் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும். கடந்த சில மாதங்களில் மட்டும் 26,000 பெண்கள் உட்பட 37 ஆயிரம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை. ஆனால், உண்மையான எண்ணிக்கை என்பது இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றனர். திருமணம் மூலம் குடியுரிமை பெற்றவர்கள், இரட்டை குடியுரிமை வைத்திருந்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.