அரியலுார்: ஜூலை 11-
கங்கை கொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடக்கும் ஆடித்திருவாதிரை திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டினார்.
ஜூலை27ம் தேதி, ஆடித்திருவாதிரை நட்சத்திர தினத்தில் அவரது பிறந்த நாள். இந்நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும், என்று கடந்த 2021ல் தமிழக அரசு உத்தரவிட்டு, விழா நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.பிரதமரின் பாதுகாப்பு
அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முகாமிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அரியலுார் கலெக்டர் ரத்தினசாமி, மாவட்ட எஸ்.பி., தீபக் சிவாச் உள்ளிட்ட அதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் விழா நடக்கவுள்ள இடத்தை, பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து போலீஸ் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.