Home Front Page News கட்சிக் கொடிகளை அகற்ற கெடு

கட்சிக் கொடிகளை அகற்ற கெடு

சென்னை: ஜூன் 19-
சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் விளாங்குடி உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களால் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், சில இடங்களில் உயிரிழப்புகள் நேரிடுவதாகவும் கூறி, ஏப். 28-ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றுமாறும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் அந்த உத்தரவில், அரசியல் கட்சியினர், பிற அமைப்பினர் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் முறையான அனுமதி பெற்று, நிரந்தர கொடிக் கம்பங்களை வைத்துக் கொள்ளலாம் என்றும், தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி ஆகியோர், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். மேலும், போக்குவரத்துக்காக மட்டுமே சாலைகள் பயன்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்துல் ஏற்படுத்தும் இதுபோன்ற விவகாரங்களில் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரக்கூடாது என அறிவுறுத்தி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், தமிழகம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். தேனி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், தென்காசி, திருவள்ளூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கோவை, தருமபுரி மாவட்டங்களில் 93 முதல் 99 சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டன. எஞ்சிய மாவட்டங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version