மேற்காசியாவில் இஸ்ரேல்- ஈரான் போர் துவங்கினால் என்ற நிலையைத் தாண்டி, இப்போது அந்த போர் நீடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சர்வதேச வல்லுநர்கள் அலசிக் கொண்டிருக்கின்றனர். போர் தொடர்ந்து நடந்தால், அதன் தாக்கத்தை நம் நாட்டிலும், வீட்டிலும் உணர முடியும். இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே உள்ள பிரச்னை, மிக நீண்ட வரலாறு கொண்டது.
பயங்கரவாத அமைப்புகளை துாண்டிவிட்டு, இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுத்து வந்தது ஈரான்.அதிலும் குறிப்பாக, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சிப்பது, தன்னை குறிவைத்து தான் என்ற எண்ணம் இஸ்ரேலிடம் பரவலாக இருக்கிறது. அணு ஆயுதத்தை தயாரிப்பதன் வாயிலாக, முஸ்லிம் நாடுகளின் தலைமை பொறுப்பு தன்னை தேடி வரும் என்று ஈரான் நம்புகிறது.
பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள், ‘சன்னி’ வகுப்பைச் சேர்ந்தவை. ஈரானில், ‘ஷியா’ வகுப்பினரே பெரும்பான்மையினராக உள்ளனர். இதனாலும், சன்னி இஸ்லாமிய நாடுகளின் தலைமை பொறுப்பை அடைவதற்கு, ஈரான் தொடர்ந்து அவசரம் காட்டி வந்துள்ளது.இது இப்படி என்றால், 2023 ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உள்நாட்டில் செல்வாக்கை இழந்து பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருந்தார்.
அவரை எதிர்த்து நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்களுக்கு முத்தாய்ப்பாக ஹமாஸ் தாக்குதல் அமையும் என்றும் சிலர் கருதினர். ஆனால், நெதன்யாகு அந்த தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ஹமாஸ் மற்றும் காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்.இதன் வாயிலாக, உள்நாட்டில் அவர் இழந்த ஆதரவை திரும்ப பெற்றாரோ இல்லையோ, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழவில்லை. இவ்வாறு இரண்டு நாட்டின் தலைமைகளுக்கான தனித்தனி இலக்குகள், இந்தப் போர் துவங்கியதற்கும், தொடர்ந்து நடப்பதற்கும் காரணமாகும்.எப்போது மேற்காசியாவில் போர் நடந்தாலும், உலகில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் போக்குவரத்து தடைபடும். இதனால், சர்வதேச சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எகிறும்.