Home விளையாட்டு முகமது சிராஜ் குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவு

முகமது சிராஜ் குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவு

பிர்மிங்காம், ஜூலை 5- இங்கிலாந்துக்கு எதிரான ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’ டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது அசாத்தியப் பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மூன்றாவது நாள் ஆட்டத்தில், சிராஜ் 19.3 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் பந்துவீச்சில் நட்சத்திரமாக ஜொலித்தார். அவரது இந்தச் சிறப்பான ஆட்டத்தை இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பும்ரா இல்லாத நிலையில் சிராஜ் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்கிச் சென்ற நிலையில், அவரது பந்துவீச்சில் என்ன மாற்றம் நடந்துள்ளது என சச்சின் குறிப்பிட்டு இருக்கிறார். “சிராஜிடம் நான் கவனித்த மிகப்பெரிய மாற்றம், அவரது துல்லியமான மற்றும் சீரான பந்துவீச்சுதான். சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை வீசுவதில் அவர் காட்டிய விடாமுயற்சிக்கு 6 விக்கெட்டுகள் பரிசாகக் கிடைத்துள்ளன. அவருக்கு ஆகாஷ் தீப் மிகச் சிறப்பாக ஆதரவளித்தார். அருமை!” என்று சச்சின் டெண்டுல்கர் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெறும் வேகம் மட்டுமல்லாமல், சரியான இடத்தில் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்வதன் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதை சிராஜ் நிரூபித்துள்ளார்.அதைத் தான் சச்சின் சுட்டிக் காட்டி பாராட்டி இருக்கிறார். சிராஜின் பந்துவீச்சை அடுத்து இந்திய அணி, இங்கிலாந்தை 407 ரன்களுக்கு சுருட்டி, முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் முன்னிலை பெற்றது. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில், சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இணைந்து அனைத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆகாஷ் தீப் 88 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். சிராஜ் 70 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84/5 எனத் திணறியது. ஆனால் ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தும், ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்காமல் 184 ரன்கள் எடுத்தும் 303 ரன்களுக்கு ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, இங்கிலாந்து அணியை 400 ரன்களுக்கு மேல் எடுத்துச் சென்றனர். இது இங்கிலாந்தின் சிறப்பான முயற்சியாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், ப்ரூக் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணி 387/5-ல் இருந்து 407 ரன்களுக்கு விரைவாக ஆல் அவுட்டானது. இரண்டாவது புதிய பந்து கைக்கு வந்ததும், கடைசி 7.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தது இந்திய அணி.

Exit mobile version