மணிலா : ஜூலை 26 –
பிலிப்பைன்ஸ் நாட்டை நேற்று முன்தினம், ‘கோ — மே’ புயல் தாக்கியதில், 25 பேர் பலியாகினர்.
தெ ன்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட புயல்களால் பாதிக்கப்படுகிறது. கடந்த 19ம் தேதி விபா புயல் உருவாகி வடக்கு பிலிப்பைன்சில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால், பிலிப்பைன்சின் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது.
முழங்கால் அளவு வெள்ள நீர் புகுந்த சர்ச்சில் திருமணம் நடந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்தன.இந்நிலையில், கோ — மே எனும் மற்றொரு புயல் 23ம் தேதி உருவானது. இது நேற்று முன்தினம் இரவு பிலிப்பைன்சின் பங்காசினான் மாகாண கரையை தொட்டு வடக்கு நோக்கி சீன கடலுக்கு நகர்ந்தது.புயல் கரையை தொட்ட போது மணிக்கு 165 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டியது. நேற்று காலை புயல் நகர்ந்ததும் காற்றின் வேகம் குறைந்தது. மீட்பு பணிகள் துவங்கின.
பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோ – மே புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மரம் விழுந்தது மற்றும் மின்சாரம் தாக்கியது போன்ற சம்பவங்களால், 25 பேர் உயிரிழந்தனர்.
மணிலா உள்ளிட்ட நக ரங்களில் மூன்றாவது நாளாக நேற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. லுாசான் மாகாணத்தில் உள்ள 77 நகரங்கள் பேரிடர் நிலையை அறிவித்துள்ளன. 2.78 லட்சம் பேர் நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியர், பேரிடர் மீட்பு குழுவினருடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.