Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்கா விமான விபத்து; உலக சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய ஸ்கேட்டிங் ஜோடி கதி என்ன?

அமெரிக்கா விமான விபத்து; உலக சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய ஸ்கேட்டிங் ஜோடி கதி என்ன?

வாஷிங்டன், ஜன. 31- அமெரிக்காவில் நடந்த பயங்கர விமான விபத்தில், 1994ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்ய ஸ்கேட்டிங் ஜோடி ஷிஷ்கோவா மற்றும் நளமோவ் இருந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் தரையிறங்க முயன்ற பயணியர் விமானமும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், விமானத்தில் பயணித்த 64 பேரும், ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று வீரர்களும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை, ஆனால் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். இதுவரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தில், 1994ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்ய ஸ்கேட்டிங் ஜோடி ஷிஷ்கோவா மற்றும் நளமோவ் இருந்துள்ளனர். இவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. யார் இந்த ஜோடி? * ஷிஷ்கோவா மற்றும் நளமோவ் ஜோடி அமெரிக்காவில் வசித்து வருகிறது. 1994ம் ஆண்டு ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்றனர். * இவர்கள் 1998ம் ஆண்டு முதல் இளம் ஸ்கேட்டர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். * இவர்களின் மகன் மாக்சிம் சாம்பியன்ஷிப் போட்டியில் களத்தில் இருந்துள்ளார். ‘இந்த கொடூரமான சோகத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் அந்த விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது’ என்று ஸ்கேட்டிங் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், 16 வயதுடைய ஒரு ஜோடி ஸ்கேட்டர்கள், அவர்களின் தாய்மார்கள் மற்றும் இரண்டு ரஷ்ய பயிற்சியாளர்களும் விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version