Home Front Page News இந்தியாவுக்கு எதிராக அணி திரட்ட சீனா, பாகிஸ்தான் தீவிர முயற்சி

இந்தியாவுக்கு எதிராக அணி திரட்ட சீனா, பாகிஸ்தான் தீவிர முயற்சி

இஸ்லாமாபாத் : ஜூலை 1 –
‘சார்க்’ அமைப்புக்கு மாற்றாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் ஒரு புதிய அமைப்பை உருவாக்க சீனா, பாகிஸ்தான் நாடுகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு போன்றவற்றிற்காக 1985ல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
கடந்த, 2016ல் ஜம்மு – காஷ்மீரின் உரி பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள், 17 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. அதன் பின், சார்க் உச்சி மாநாடு நடைபெறவே இல்லை.
இந்த நிலையில், சீனாவும், எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா உடன் மோதலில் ஈடுபட்டது. மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில் அமைந்துள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகமும், இந்தியா எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த, 19ம் தேதி சீனாவின் குன்மிங்கில், சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் இடையே சந்திப்பு நடந்தது. அப்போது, இந்தியா தவிர சார்க் அமைப்பில் உள்ள மற்ற தெற்காசிய நாடுகளை ஒருங்கிணைத்து, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Exit mobile version