சென்னை: ஜூலை 1 –
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வரும் 2026 ஏப்ரல் 1ல், வீடுகள் பற்றி கணக்கெடுப்பு துவங்க உள்ளதாக, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
வரும் 2027 மார்ச் 1 முதல், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. அதன் முதல் கட்டமாக, வரும் 2026 ஏப்ரல் 1 முதல் வீடுகள் பட்டியல் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. அதற்காக கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகளை, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும். இந்த வீடுகள் கணக்கெடுப்பின்போது, வீடுகள் பட்டியல், வீட்டின் பிற விபரங்கள், சொத்து விபரங்கள் சேகரிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, மக்கள்தொகை, சமூக, பொருளாதார, கலாசார விபரங்கள் சேகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வரும் 2026ல் வீடுகள் கணக்கெடுப்பு துவங்குவதால், வரும் டிசம்பருக்குப் பின், மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, புதிய மாவட்டங்கள், தாலுகாக்களை அமைக்க முடியாது. எனவே, நடப்பு தி.மு.க., ஆட்சியில் புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு, இதுவே கடைசி வாய்ப்பு.