புதுடெல்லி:மே 22- நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தினருக்கு எதிரான நடவடிக்கையை பல்வேறு மாநிலங்கள் தொடங்கியுள்ளன.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு உள்நாட்டுப் பாதுகாப்பு கருதி, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பி வருகிறது.
வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி நாடு முழுவதும் தங்கியிருக்கும் நிலையில் அவர்களை அடையாளம் காணும் பணியை ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன.
ஒடிசா சட்ட அமைச்சர் பிரிதிவிராஜ் ஹரிச்சந்திரன் கூறுகையில், “வங்கதேசத்தவரை அடையாளம் காணும் நடைமுறை ஒடிசாவில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணும் நடைமுறையை ஒருங்கிணைக்க சிறப்பு பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.மகாராஷ்டிர அரசும் இந்த நடைமுறையை ஏற்கெனவே தொடங்கி விட்டது. மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோத குடியேறிகள் 766 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சமீப காலத்தில் 300 வங்கதேசத்தின் நாடு கடத்தப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அண்மையில் கூறுகையில், “எல்லை தாண்டிய ஊடுருவல் அசாமுக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. அசாமில் தடுப்புக்காவல் முகாமில் இருப்பவர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினரை மத்திய அரசு நாடு கடத்தி வருகிறது. இதனால் இப்பிரச்சினையின் தீவிரம் குறைந்து வருகிறது” என்றார்.ராஜஸ்தானின் 17 மாவட்டங்களில் இதுவரை 1,008 ஊடுருவல்காரர்களை கைது செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் முதல்கட்டமாக 148 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்படுவதற்காக மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்