புதுடில்லி:ஜூலை 1 – ‘’ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது’’ என ஜி 7 அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை உள்ளடக்கியது, ‘ஜி – 7’ அமைப்பு. ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒன்று கூடி மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர், ‘ஜி – 7’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. ஈரான் செறிவூட்டல் நடவடிக்கைகளை மீண்டும் உருவாக்க வேண்டாம். ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்தத்தை ஆதரிக்கிறோம். அமைதியை சீர்குலைப்பதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும். போர் பின்னணியில் இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உண்டு. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி பொருட்கள் பற்றிய தகவல்களை சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஈரான் ஒப்பந்தத்தின் கீழ் அதன் கடமைகளை முழுமையாக செயல்படுத்துவது மிகவும் அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.