ஒட்டாவா: டிச. 9: கனடா நாட்டின் எட்மான்டன் நகரில், 20 வயது இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கனடா நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், எட்மான்டன் நகரில், இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் வசித்து வந்தார். இவருக்கு வயது 20. இவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்தனர். இது தொடர்பாக, கனடா நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மாணவர் உயிரிழப்புக்கு, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் 6ம் தேதி எட்மண்டனில் இந்திய இந்திய வாலிபர் ஹர்ஷன்தீப் சிங் மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். துயரத்தில் இருக்கும் மாணவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த கனடா போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது. ஏற்கனவே, காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.