Home Front Page News இந்திய வம்சாவளியினர் கலாசார தூதர்கள் மோடி பெருமிதம்

இந்திய வம்சாவளியினர் கலாசார தூதர்கள் மோடி பெருமிதம்

போர்ட் ஆப் ஸ்பெயின்,ஜூலை 4 – வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள் என்று டிரினிடாட் அன்ட் டொபாகோவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கானா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, டிரினிடாட் அன்ட் டொபாகோவுக்கு சென்றார். அந்நாட்டின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினுக்கு சென்ற பிரதமரை, அந்நாட்டு பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸெசார் வரவேற்றார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, டிரினாடாட் அன்ட் டொபாகோவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார் அவர் பேசியதாவது; கடவுள் ஸ்ரீ ராமர் மீதான உங்களின் நம்பிக்கை குறித்து நான் நன்கு அறிவேன். இங்குள்ள ராமர் கோவில்கள் தனித்துவமானவை. ராமரின் புனித நகரம் மிகவும் அழகாக இருப்பதால், அதன் புகழ் உலகம் முழுவதும் போற்றப்படுவதாக ராமசரிதமானஸ் கூறுகிறது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பியதை நீங்கள் வரவேற்றீர்கள். அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக, புனித நீரையும், சிலைகளையும் அனுப்பி வைத்தீர்கள். இதே போன்ற உணர்வுடன், ராமர் கோவிலின் பிரதியையும் புனித சரயு நதியில் இருந்து புனித தீர்த்தத்தையும் இங்கு கொண்டு வருவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தபோது இருந்த உறவை விட, தற்போது நட்பு இன்னும் வலுப்பெற்றுள்ளது. வாரணாசி, பட்னா, கொல்கத்தா மற்றும் டெல்லி இந்தியாவின் நகரங்களாக இருக்கலாம். ஆனால் இங்கேயும் அந்த பெயர்களில் தெருக்கள் உள்ளன. நவராத்திரி, மகாசிவராத்திரி மற்றும் ஜென்மாஷ்டமி இங்கே மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன. இளைய தலைமுறையினரின் பிரகாசமான கண்களில் ஆர்வத்தைக் காண்கிறேன். எங்களின் பிணைப்புகள் புவியியல் மற்றும் தலைமுறைகளுக்கு அப்பாற்பட்டவை.இந்திய வம்சாவளியினர் கங்கையையும், யமுனையையும் விட்டுச் சென்று விட்டனர். ஆனால் தங்கள் இதயத்தில் ராமாயணத்தை ஏந்தியுள்ளனர். அவர்கள் தங்கள் மண்ணை விட்டுச் சென்று விட்டனர், ஆனால் தங்கள் ஆன்மாவை அல்ல. அவர்கள் வெறும் புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, காலத்தால் அழியாத நாகரிகத்தின் தூதர்கள். அவர்களின் பங்களிப்பு இந்த நாட்டிற்கு கலாசார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பலன் அளித்துள்ளது. நான் அடிக்கடி சொல்வது போல், நீங்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் மதிப்புகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்கள், இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version