காஷ்மீர்: மே 24-
லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் செல்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். ராகுல் காந்தி பயணத்தை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பூஞ்ச் மாவட்டம் செல்லும் ராகுல் காந்தி, பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஆபரஷேன் சிந்தூருக்கு பின் முதல் முறையாக காஷ்மீருக்கு ராகுல் காந்தி செல்கிறார். இதனனையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த மாதம் 25 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் உமர் அப்துல்லாவையும் சந்தித்து பேசியிருந்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான், இந்தியா மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அடாவடி செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது. ஷெல் மற்றும் சிறிய பீரங்கிகள் மூலமாகவும் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா கொடுத்த அதிரடி தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.
இதையடுத்து தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தியாவை சீண்டும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாகிஸ்தான் தலைவர்களும் அமைச்சர்களும் பேசி வருவது இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை முழுமையாக தணிய விடாமல் வைத்துள்ளது.