Home Front Page News கேரளாவில் 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை

கேரளாவில் 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை

புதுடெல்லி: மே 24-
கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியதாக அமையும்.
சாதகமான சூழல்: கடந்த இரண்டு தினங்களாகவே அரபிக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, பருவமழைக்கு முந்தைய மழைப்பொலிவும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவருகிறது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்துக்குள் தொடங்குவதற்கான அனைத்து சாதகமான சூழலும் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2009-க்குப் பின்னர்: கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு, கேரளாவில் மே.23-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 1918-ம் ஆண்டு மே.11-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதுதான், கேரள வரலாற்றிலேயே தென்மேற்கு பருவமழை மிகவும் முன்கூட்டியே தொடங்கியதாக இருக்கிறது. அதேபோல் 1972-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி தொடங்கியதுதான் மிகவும் தாமதமான தொடக்கமாக இருக்கிறது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதிதான் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை எச்சரிக்கை: இந்நிலையில், கேரளா, கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா பகுதிகளில் ஆங்காங்கே அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழையும், வடக்கு உள் கர்நாடகா, உள் மகாராஷ்டிரா, குஜராத்தின் சில பகுதிகளிலும் கனமழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version